பாம்பன் ரோடு பாலத்தில் கார்–லாரி மோதி 3 பேர் படுகாயம்
பாம்பன் ரோடு பாலத்தில் கார்–லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35). இவருக்கு சொந்தமான காரில் ராமநாதபுரம் வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். இந்த காரை பாம்பன் கிழக்குவலசையை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் என்பவர் ஓட்டினார். கார் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த டிப்பர் லாரியும் காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்த ராஜ்குமார், டிரைவர் பாலமுருகன் சீட்பெல்ட் போட்டு இருந்ததால் மோதிய வேகத்தில் காரில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிந்தது. இதனால் காரில் இருந்த 2 பேரும் படுகாயத்துடன் உயிர்தப்பினர்.
லாரி டிரைவர் காருகுடியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் பாம்பன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக பாம்பன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ராமேசுவரம் சென்றுவிட்டு ராமநாதபுரம் நோக்கி வந்த கலெக்டர் நடராஜன் சம்பவ இடத்தில் இறங்கி விபத்து குறித்து விசாரித்தார். மேலும் பாம்பன் பாலத்தில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.