விருதுநகர் மாவட்டத்தில் சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ. 67 கோடி இலக்கு
விருதுநகர் மாவட்டத்தில் சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.67 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்,
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தொழில் கடன் வழங்கும் விழா சிவகாசியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். விழாவில் கலெக்டர் சிவஞானம் பேசும்போது கூறியதாவது:–
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது குறுசிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு நிலம் மற்றும் எந்திரங்கள் வாங்குவதற்கும், கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிதியுதவி அளித்து தமிழக தொழில் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்குவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும், உற்பத்தியை பன்முனைப்படுத்துவதற்கும் மற்ற நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்க வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது விடுதிகள் மற்றும் உணவகங்கள் அமைப்பதற்கும், மருத்துவமனைகள் அமைப்பதற்கும் வணிக வளாகங்கள் போன்ற சேவை சார்ந்த தொழில்களுக்கும் நிதி உதவி அளிக்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு கடன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட உள்ள சாதகமான சூழ்நிலைகளை தொழில் முனைவோர்களுக்கு விளக்கவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் புதிய தொழில்களை தொடங்க ஊக்குவிப்பது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கம் ஆகும்.
தொழில் முனைவோர்கள் எந்த ஒரு தொழில் தொடங்கும் முன்பு நன்றாக யோசித்து, மக்கள் எளிமையாக பயன்படுத்தும் பொருளாகவும், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், புதிய உற்பத்தி செய்யும் முறைகளை கையாண்டு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற்று பயனடைந்தவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து கடன் பெற்று பயன்பெற வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நடப்பு நிதி ஆண்டிற்கு விருதுநகர் மாவட்டத்தில் சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.67 கோடியும், கடன் பட்டுவாடா இலக்காக ரூ.49 கோடியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் கடனுதவி பெற்று தமிழ்நாட்டின் தொழில் துறையில் முன்னோடி மாவட்டமாக உருவாக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்று பயனடைந்து சிறப்பான முறையில் கடன் தொகையை திருப்பி செலுத்திய 27 நிறுவனங்களுக்கு பரிசுகளையும், தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.