சங்கரன்கோவிலில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய அதிகாரி பரிதாப சாவு

சங்கரன்கோவிலில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மின்வாரிய அதிகாரிநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 33). இவர் சங்கரன்கோவில் துணை மின்நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
சங்கரன்கோவில்– நெல்லை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
பரிதாப சாவுஇதில் பலத்த காயம் அடைந்த சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுப்புராஜின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த சுப்புராஜூக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுப்புராஜ் உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க செய்தது.






