கண்களை கறுப்புத்துணியால் கட்டிக் கொண்டு 3–வது நாளாக விவசாயிகள் உடுக்கு அடித்து போராட்டம்
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் 3–வது நாளாக விவசாயிகள் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு உடுக்கு அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் 3–வது நாளாக விவசாயிகள் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு உடுக்கு அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருக்கும் போராட்டம்கடந்த 2 ஆண்டுகளில், பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை வாபஸ் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 5–ந்தேதி காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.
தூக்கு கயிறு மாட்டி...முதல் நாளில் விவசாயிகள் மடியேந்தி பிச்சை கேட்கும் போராட்டம், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் போராட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணம்மாள் (வயது 70) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணம்மாள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றார்.
கறுப்பு துணியால் கண்களை..நேற்று 3–வது நாளாக விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை தொடர்ந்தனர். மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கறுப்பு துணிகளால் தங்களது கண்களை கட்டியவாறு போராட்டத்தில் பங்கேற்றனர். சில விவசாயிகள் உடுக்கு அடித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.