மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி கட்டுமான துறையினர் ஆர்ப்பாட்டம்
மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி மயிலாடுதுறையில் கட்டுமான துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், கட்டிட பொறியாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுனர் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் குமார், பொருளாளர் சிவராமன், கட்டிட தலைவர் மணிமாறன், துணை தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்டிட பொறியாளர் சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பிரேம் நவுசாத் கலந்து கொண்டு பேசினார்.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மணல் குவாரிகளை ஏற்படுத்தி மணல் தட்டுப்பாடின்றி வினியோகிக்க வேண்டும். அதேபோல் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும், கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் பணி நிறைவு சான்றிதழ்களை ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கட்டிட பொறியாளர் சங்க செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.