கேரள அரசு நிதி இல்லை என கூறியதால் திண்டுக்கல்–சபரிமலை ரெயில் பாதை திட்டம் தாமதம்


கேரள அரசு நிதி இல்லை என கூறியதால் திண்டுக்கல்–சபரிமலை ரெயில் பாதை திட்டம் தாமதம்
x
தினத்தந்தி 8 July 2017 4:15 AM IST (Updated: 8 July 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கேரள அரசு நிதி இல்லை என கூறியதால் திண்டுக்கல்–சபரிமலை ரெயில் பாதை திட்டம் தாமதமாகி வருவதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரி கூறினார்.

திண்டுக்கல்,

தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரி நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–

மணப்பாறை–தாமரைப்பாடி இடையே 2–வது ரெயில் பாதை அமைக்கும் பணி, நிலம் எடுப்பதில் இருந்த பிரச்சினையால் தாமதம் ஆனது. தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவுபெற்று விடும். மேலும் இன்னும் ஓராண்டுக்குள் சென்னை எழும்பூர் முதல் திண்டுக்கல் வரை 2–வது பாதை பணிகள் முழுமையாக முடிந்து விடும்.

ராமேசுவரம்–எர்ணாகுளம் இடையே வாராந்திர ரெயில் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்ததால், வருவாயும் குறைவாக இருந்தது. இதனால் அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மீண்டும் ரெயில் இயக்கப்படும். இதுதவிர செங்கோட்டை–புனலூர் ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரெயில் பாதை இல்லை. எனவே, புதிதாக தான் ரெயில் பாதை அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு 50 சதவீத நிதி வழங்க வேண்டும். ஆனால், கேரள மாநில அரசு நிதி இல்லை என்று கூறிவிட்டதால், தாமதமாகி வருகிறது. நிதி ஆதாரம் கிடைத்தால் உடனடியாக பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story