நத்தக்காடையூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


நத்தக்காடையூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 July 2017 10:00 PM GMT (Updated: 7 July 2017 7:28 PM GMT)

நத்தக்காடையூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்தூர்,

நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகரில் சுமார் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு நத்தக்காடையூர் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடும் வறட்சியின் காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரதியார் நகர் பொதுமக்களுக்கு கடந்த 4 மாத காலமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாரதியார் நகர் பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஒன்று திரண்டு வந்து நத்தக்காடையூர்–ஈரோடு மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், ஒன்றிய மேற்பார்வையாளர் சரவணகுமார், நத்தக்காடையூர் ஊராட்சி செயலர் முத்துச்சாமி மற்றும் காங்கேயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது பாரதியார் நகர் பொதுமக்களுக்கு 2 நாளைக்கு ஒருமுறை டிராக்டர், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், மேலும் விரைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுக்கு உடனடியாக மின்மோட்டார் பொருத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நத்தக்காடையூர் – ஈரோடு மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story