அவினாசியில் ரூ.7 லட்சம் மதிப்பில் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்


அவினாசியில் ரூ.7 லட்சம் மதிப்பில் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2017 3:30 AM IST (Updated: 8 July 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் ரூ.7 லட்சம் மதிப்பில் சுமார் 2 டன் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவினாசி,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பிரமணியன், பழனிசாமி, ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை முதல் அவினாசி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, குடோன்கள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் விற்கப்படுகிறதா? என்று தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதில் பி.எஸ்.சுந்தரம் வீதியில் உள்ள புன்மாராம்(40) என்பவருடைய குடோனில் சோதனை செய்த போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குடோனில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 1½ டன் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.

இதுபோல் சேவூர் ரோட்டில் ஜெகதீஸ் என்பவருடைய குடோனில் இருந்து 300 கிலோ புகையிலை பொருட்களும், ராயன் கோவில் காலனி பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து 400 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 பெட்டிக்கடைகள் மற்றும் 4 மளிகை கடைகளில் சோதனையின் போது மொத்தம் 50 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கின.

இதுபற்றி மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், அவினாசி பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உணவு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வியாபாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story