ஊருக்குள் புகுந்து அக்காள், தம்பியை தாக்கி காட்டுயானை அட்டகாசம்


ஊருக்குள் புகுந்து அக்காள், தம்பியை தாக்கி காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 8 July 2017 3:30 AM IST (Updated: 8 July 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

சின்னதடாகத்தில் ஊருக்குள் புகுந்து அக்காள், தம்பியை தாக்கி காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

துடியலூர்,

கோவை ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 50–க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும், வீடுகளை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் மனித– வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் கணுவாயை அடுத்த சின்னதடாகத்திற்குள் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒற்றை காட்டுயானை புகுந்தது.

பின்னர் அங்குள்ள செங்கல் சூளைக்கு சென்ற அந்த யானை, அருகில் உள்ள வீடுகளின் கதவு மற்றும் மேற்கூரையை துதிக்கையால் தள்ளி சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த தவமணி என்பவரின் மனைவி சுசிலாவை(வயது 30) அந்த யானை துதிக்கையால் தாக்கியது. தொடர்ந்து பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வந்த சுசிலாவின் தம்பி ஜோதிபாசு என்பவரை துதிக்கையால் தூக்கி வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து பட்டாசு வெடித்து அந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதில் காயம் அடைந்த சுசிலா மற்றும் ஜோதிபாசு ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊருக்குள் காட்டுயானை புகுந்து அக்காள், தம்பியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story