போலீஸ் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
போலீஸ் உயர் அதிகாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் திண்டாட்டம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் மார்க்கத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக நேற்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக சென்றபடி இருந்தன. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அதிகாரிகளுடைய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல வேண்டும் என்பதிலேயே தங்களுடைய முழு கவனத்தையும் செலுத்தினர். அதிகாரிகளுடைய வாகனங்கள் தொலைவில் வரும்போதே அவர்களுக்காக சிறிது நேரம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
குறிப்பாக சிக்னல் இயங்காமல் இருக்கும் வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் நின்றுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் தங்களுடைய அதிகாரிகள் வாகனங்கள் நிற்காமல் வருவதற்கு வசதியாக அந்த வழியாக வந்த வாகனங்களை சிக்னலில் நிறுத்தாமல் தொடர்ந்து அனுமதித்தனர். இதனால் சென்டிரல், எழும்பூர் ஆகிய மார்க்கத்தில் இருந்து வலதுபக்கம் திரும்புவதற்காக வந்த வாகனங்கள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திண்டாடினர்.
வாகன ஓட்டிகள் ஆதங்கம்
அப்போது அந்த வழியாக வந்த பத்திரிகையாளர் ஒருவர் போக்குவரத்து போலீசாரிடம், கீழ்ப்பாக்கம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழி அனுப்புகிறீர்களே, ஏன்? என்று விளக்கம் கேட்டார். அதற்கு அந்த போலீசார், ‘சட்டசபையில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கை இன்று(நேற்று) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு இந்த வழியாக செல்கின்றனர். அவர்கள் வரும் போது அவர்களுடைய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ‘வயர்லெஸ்’ கருவி மூலம் எங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்.’ என்றார்.
மக்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் போலீசாரே, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாமா? என்று வாகன ஓட்டிகள் சிலர் ஆதங்கம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story