மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம்
சாலையை கடந்து செல்வதை தவிர்த்து மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம். சுரங்கப்பாதையில் நடந்து செல்வதற்கு கட்டணம் வசூலிப்பார்களா? என்ற அச்சம் தேவையில்லை.
சென்னை,
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர், விமானநிலையம்-சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இயங்கி வருகிறது. அதேபோல், 7.40 கிலோ மீட்டர் தூரத்துக்கான திருமங்கலம்-நேரு பூங்கா இடையேயான சுரங்கப்பாதை கடந்த மே மாதம் 14-ந் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.
நேரு பூங்கா-சென்னை எழும்பூர் இடையே சுரங்கப்பாதை சேவையை கொண்டு வர தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை செல்லும் பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி ஆகும்.
இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்லும் போது, சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு செல்வதற்கு சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது. அப்படி சாலையை கடந்து செல்பவர்கள் அதை தவிர்த்து மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம்.
கட்டணம் கிடையாது
இந்த மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்படுத்தினால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் பலர் அதை பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவதற்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் எந்த வித கட்டணமும் வசூலிப்பது கிடையாது.
திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
பாதசாரிகள் பயன்படுத்தலாம்
மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம். கட்டணம் வாங்குவார்கள்? என்ற பயத்தில் பலர் அதை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 2 விதமான வழிகள் இருக்கின்றன. இந்த 2 வழிகளிலும் சுரங்கப்பாதை இருக்கிறது. இதை பாதசாரிகள் பயன்படுத்தலாம்.
சுரங்கப்பாதையில் இறங்குவதற்கு படிக்கட்டும், ஏறுவதற்கு எஸ்கலேட்டர் வசதியும் இருக்கிறது. டிக்கெட் கவுண்ட்டரை தாண்டி ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்வதற்கு மட்டும் தான் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்காக சுரங்கப்பாதையிலும் வெகுநேரம் நிற்கக்கூடாது. அதை கண்காணிப்பு கேமரா மூலம் நாங்கள் கண்காணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story