மும்பையில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து விபத்து சிறுமி, ஆண் குழந்தை பலி
பாந்திராவில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட விபத்தில் சிறுமி, 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்
மும்பை,
பாந்திராவில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட விபத்தில் சிறுமி, 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கோர்ட்டு உத்தரவுமும்பை மக்களுக்கு தான்சா, வைத்தர்ணா, பட்சா போன்ற ஏரிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குழாய்கள் அடிக்கடி உடைந்து விபத்துகள் ஏற்படுவது உண்டு. இதையடுத்து ராட்சத குடிநீர் குழாய்களையொட்டி 10 மீட்டருக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எனவே மாநகராட்சியினர் ராட்சத குடிநீர் குழாயையொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்து வந்தனர். எனினும் பலர் ராட்சத குடிநீர் குழாய்களையொட்டி குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.
சிறுமி, குழந்தை பலிஇந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையம் எதிரே ராட்சத குடிநீர் குழாய் அருகே அந்த பகுதியில் வசித்து வரும் சிறுமி பிரியங்கா (வயது 9), 8 மாத ஆண் குழந்தை விக்னேசுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்து தண்ணீர் ஒரு பனை உயரத்தில் அதிக அழுத்தத்தில் பீறிட்டு அடித்தது. இதில் அருகில் விளையாடி கொண்டு இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதேபோல அந்த பகுதியில் நின்ற குழந்தையின் பாட்டி, தாயும் வேகமாக வெளியேறிய தண்ணீரில் சிக்கி லேசான காயமடைந்தனர்.
இந்தநிலையில் அக்கம்பக்கத்தினர் சிறுமி, குழந்தையை மீட்டு பாந்திரா பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமி பிரியங்கா மேல் சிகிச்சைக்காக வி.என். தேசாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி காலை 11.50 மணியளவில் அவளும் பரிதாபமாக உயிரிழந்தாள்.
வீடுகளுக்குள் தண்ணீர்...குடிநீர் குழாய் உடைந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அதில் இருந்து தண்ணீர் குபுகுபுவென வேகமாக வெளியேறியது. குழாயின் அருகில் இருந்த மரத்தின் கிளை தண்ணீரின் வேகத்தில் முறிந்தது. இதேபோல ராட்சத குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஆறு போல அந்த பகுதியில் வெள்ளமாக ஓடியது.
இதனால் அந்த பகுதியில் இருந்த வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வீடுகளில் இருந்த பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டன.
மீட்பு பணிஇந்தநிலையில் தண்ணீர் புகுந்ததால் வீடுகளுக்கு உள்ளே இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் வெள்ளமாக ஓடிய தண்ணீரில் தத்தளித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரி விளக்கம்இந்த விபத்து குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் அல்கா சாசானே கூறும்போது:–
ராட்சத குடிநீர் குழாயையொட்டி இருந்தவர்களை காலி செய்யமாறு ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து இருந்தோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானதால் நேற்று மும்பையின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தண்ணீரின்றி மிகவும் அவதி அடைந்தனர்.