இணையதள விளம்பரம் மூலம் என்ஜினீயரிங் மாணவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி


இணையதள விளம்பரம் மூலம் என்ஜினீயரிங் மாணவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 7 July 2017 9:33 PM GMT (Updated: 7 July 2017 9:33 PM GMT)

இணையதளம் மூலம் விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை எழில்நகரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இவர் இணையதளத்தில் ஒரு செல்போன் விளம்பரத்தை கண்டு அதை வாங்க எண்ணினார். இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்கணக்கிற்கு ரூ.30 ஆயிரத்தை இணையதளம் மூலமே செலுத்தினார்.

ஆனால் பணம் செலுத்தி பல நாட்கள் ஆன பின்னரும் அவரது முகவரிக்கு செல்போன் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

வாலிபர் கைது

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு ரக்‌ஷனாசிங் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுவையார் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மகன் அர்ஜூன் என்ற ஆதித்யா (34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி செய்தது எப்படி?

கைதான ஆதித்யா போலியான முகவரியை கொடுத்து செல்போன் கார்டுகளை வாங்கியுள்ளார். பின்னர் இணைய தளத்தில் பணம் பரிமாற்றம் செய்யும் சேவையை பயன்படுத்தி போலி கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் மூலம் பழைய சாதனங்களை விற்கும் இணையதளத்தில் செல்போன் மற்றும் லேப்டாப் விற்பனை செய்வதுபோல் விளம்பரம் செய்து போலியான கணக்கில் பணத்தை பெற்ற பின்னர் செல்போன் எண்ணை மாற்றி விடுவதை வாடிக்கையாக கொண்டு மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தொடங்கிய போலி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவரது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுத்து மோசடி செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதுபோன்று யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் லாஸ்பேட்டை காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் சூப்பிரண்டு ரக்‌ஷனா சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story