இந்திராகாந்தியை போல் மோடியின் வீழ்ச்சிக்கு அவரது பக்தர்களே காரணமாக அமையலாம் சிவசேனா சாடல்

‘‘இந்திராகாந்தியை போல் மோடியின் வீழ்ச்சிக்கும் அவரது பக்தர்களே காரணமாக அமையலாம்’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை,
‘‘இந்திராகாந்தியை போல் மோடியின் வீழ்ச்சிக்கும் அவரது பக்தர்களே காரணமாக அமையலாம்’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
பா.ஜனதா கவுன்சிலர்கள் கோஷம்ஜி.எஸ்.டி. நடைமுறையால் மும்பை மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு, ரூ.647 கோடியே 34 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சிக்கு மராட்டிய அரசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பங்கேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில், காசோலையை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரிடம் வழங்கினார்.
அப்போது, பாரதீய ஜனதா கவுன்சிலர்கள் ‘மோடி, மோடி’ என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால், சிவசேனா கவுன்சிலர்களுக்கும், பா.ஜனதா கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவியது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நேற்று சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–
‘இந்தியாவே இந்திரா தான்’இன்றைக்கு தேவையில்லாமல் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்புபவர்கள், உண்மையில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் இந்திராகாந்தியின் பெயரை குறிப்பிட்டும் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும், ‘இந்தியாவே இந்திரா தான்’ என்று அவரது பக்தர்கள் கோஷமிட்டு, தேசத்தை அவமதித்தார்கள். இது புரட்சி தீப்பொறிக்கு வித்திட்டு, அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆகையால், நரேந்திர மோடியின் பெருமைக்கும், அவர் மீதான வெறித்தனத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எச்சரிக்கைஉண்மை என்னவென்றால், 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்திராகாந்தி வெற்றி பெற்றது மட்டுமின்றி, அந்நாட்டை சிதற அடித்து ஓடவிட்டார். எனினும், இந்திராகாந்தியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்திய மிதமிஞ்சிய பக்தியால் தான் அவர் வீழ்ச்சி அடைந்தார் என்பதை பா.ஜனதாவுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறோம்.
ஆகையால், எங்களது நண்பர்களே (பா.ஜனதா), இந்த சொந்த பக்தி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இன்றைக்கு மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் அவரது பக்தர்கள் (ஆதரவாளர்கள்) நாளைக்கு அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாம்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.






