ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்

விவசாய நிலத்துக்கு குளத்து மண் அள்ள ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகர்கோவில் வருவாய் ஆய்வாளரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நாகர்கோவில்,
விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக குளங்களில் இருந்து மண் அள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஏராளமான குளங்களில் இருந்து விவசாயிகள் மண் எடுத்து வருகிறார்கள். நாகர்கோவில் அருகேயுள்ள பொட்டல் சம்பா குளத்தில் மண் அள்ள தாராபுரத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவர் அனுமதி பெற்றிருந்தார். 10 யூனிட் மண் எடுத்துக்கொள்ள அவருக்கு உரிமம் அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு தங்கவேல், குளத்தில் மண் எடுத்துத்தர கான்டிராக்டர் பாபு என்பவருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அதன்படி சம்பா குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் பாபு ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த் சதீஷ், அந்த குளத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, குளத்தில் மண் அள்ளுவதற்கு தன்னுடைய அனுமதியையும் பெற வேண்டும் என்றும், அதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என பாபுவிடம் கேட்டதாகவும், கொடுக்க மறுத்தால் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு இதுபற்றி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
கையும், களவுமாக கைது
வருவாய் ஆய்வாளர் ஆனந்த் சதீசை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சுதா செல்வசுந்தரம் ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாபு மூலம் கொடுத்து அனுப்பினர்.
நேற்று பகல் 11 மணி அளவில் நாகர்கோவில் கோர்ட்டு அருகே வரும்படி வருவாய் ஆய்வாளர் ஆனந்த் சதீசை, பாபு அழைத்தார். அதன்படி ஆனந்த் சதீஸ் அங்கு வந்தார். ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை பாபு கொடுத்தார். அதை ஆனந்த் சதீஷ் வாங்கினார். உடனே அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து ஆனந்த் சதீசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ஆனந்த் சதீசின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் உடனடியாக சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளதால் ஆனந்த் சதீஷ் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் சிலரிடம் லஞ்சமா?
லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணைசூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் கூறும் போது, ‘லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் ஆனந்த் சதீஷ் ஏற்கனவே சிலரிடம் லஞ்சம் பெற்று இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மண் அள்ளுவது தொடர்பாக 3 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் அவர் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story






