மும்பையில் விரைவில் ‘மகளிர் மட்டும்’ பஸ்கள் அறிமுகம் 100 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன


மும்பையில் விரைவில் ‘மகளிர் மட்டும்’ பஸ்கள் அறிமுகம் 100 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன
x
தினத்தந்தி 7 July 2017 9:53 PM GMT (Updated: 2017-07-08T03:23:36+05:30)

மும்பையில் விரைவில் ‘மகளிர் மட்டும்’ பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்காக 100 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

மும்பை,

மும்பையில் விரைவில் ‘மகளிர் மட்டும்’ பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்காக 100 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

‘மகளிர் மட்டும்’ பஸ்கள்

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் ‘மகளிர் மட்டும்’ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்லும் மும்பை நகரத்தில் இந்த திட்டம் அமலில் இல்லாமல் உள்ளது.

இந்தநிலையில் கடந்த பட்ஜெட்டில் ‘தேஜஸ்வினி’ எனப்படும் மகளிர் மட்டும் பஸ்களுக்கு மாநில அரசு ரூ.50 கோடி ஒதுக்கியது. இதையடுத்து மாநில அரசின் பங்களிப்புடன் பெஸ்ட் குழுமம் மும்பையில் மகளிர் மட்டும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்த தகவலை நேற்று முன்தினம் நடந்த பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் அதன் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பாக்டே தெரிவித்தார்.

100 புதிய பஸ்கள்

இந்த திட்டத்திற்காக 100 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இதில் மினி ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த பஸ்கள் பெண்கள் அதிகளவு வேலைக்கு செல்லும் கொலபா, கப்பரேடே, நரிமன்பாயிண்ட், லோயர் பரேல், மலாடு, கோரேகாவ் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படும். இதேபோல ரெயில் நிலையங்களின் வெளியில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு இயக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக மகளிர் மட்டும் பஸ்களில் பெண் டிரைவர், கண்டக்டர்களே பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

மும்பை தவிர நவிமும்பை, தானே, கல்யாண்– டோம்பிவிலி, நாக்பூரிலும் மகளிர் மட்டும் பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story