ஊட்டி தேனிலவு படகு இல்லத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு


ஊட்டி தேனிலவு படகு இல்லத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 8 July 2017 11:57 AM IST (Updated: 8 July 2017 11:57 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தேனிலவு படகு இல்லத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று இரு பிரிவுகளாக தரம் பிரித்து குப்பைகளை நகராட்சி சுகாதார பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். இதில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. அந்த உரத்தை விவசாயிகள் வாங்கி சென்று தங்கள் விளைநிலங்களில் பயன்படுத்தி வருகின்றனர். மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஊட்டி படகு இல்லத்தின் மறு கரையோரத்தில் தேனிலவு படகு இல்லம் உள்ளது. இந்த தேனிலவு படகு இல்லத்தில் குப்பைகளை போடுவதற்கு குப்பை தொட்டிகள் இருந்தும், குப்பைகளை ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வீசி விடுகின்றனர். அங்குள்ள வாகனம் நிறுத்தும் இடம் அருகே ஒதுக்குப்புறமாக தற்போது குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக்கழிவுகள் போன்ற குப்பைகள் அதிகளவில் கிடக்கிறது.

சுகாதார சீர்கேடு

தேனிலவு படகு இல்லத்தில் உள்ள குப்பைகளை சுகாதார பணியாளர்கள் சரிவர அகற்றுவது இல்லை என தெரிகிறது. மேலும் அங்குள்ள குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுற்றுலா தலமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேனிலவு படகு இல்லத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுபொருட்களை நகராட்சி சுகாதார பணியாளர்கள் சரிவர அகற்றுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் அங்கேயே கிடப்பதால் கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பைகளை தீ வைத்து விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், காற்று மாசடைகிறது. குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் தேனிலவு படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

மேலும் குப்பைகளை தீ வைப்பதால் புகைமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சுற்றுலா தலங்களில் முறையாக பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story