பத்மநாபசாமி கோவிலில் பொற்குவியல்கள் நிறைந்த ரகசிய அறையை திறக்கக்கூடாது
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பொற்குவியல்கள் நிறைந்த ‘பி‘ ரகசிய அறையை திறக்கக்கூடாது என்றும், அது தெய்வ குற்றம் ஆகிவிடும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்ப இளைய பிரதிநிதியான ஆதித்ய வர்மா கூறினார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் பிரசித்திப்பெற்ற பத்மநாபசாமி கோவிலில் மூலவிக்ரகத்திற்கு அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வைரகற்கள் காணாமல் போயிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தவும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், பக்தர்களின் சந்தேகங்களை நீக்கும் வகையில் பொற்குவியல்கள் நிறைந்த ‘பி‘‘ ரகசிய அறையை திறந்து பரிசோதிக்க கேட்டுக்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் இளைய பிரதிநிதி ஆதித்ய வர்மா நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, “சுப்ரீம் கோர்ட்டு கூறியதை போல் ‘பி‘‘ ரகசிய அறையை திறக்கக்கூடாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் முறையிட உள்ளோம். முற்காலங்களில் 7 முறை ‘பி‘ ரகசிய அறை திறக்கப்பட்டு உள்ளதாக தணிக்கை அதிகாரி வினோத் ராய் கூறுவதை ஏற்க முடியாது. ராஜ குடும்பத்தின் தற்போதைய தலைமுறை உறுப்பினர்களுக்கு ஒரு போதும் ‘பி‘ ரகசிய அறை திறக்கப்பட்டதாக நினைவு இல்லை“ என்றார். இதே கருத்தை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் மூத்த பிரதிநிதி அஸ்வதி திருநாள் கவுரிலட்சுமி பாயும் கூறியுள்ளார்.
6 ரகசிய அறைகளை கொண்ட பத்மநாபசாமி கோவிலில் ஏற்கனவே ‘பி‘ ரகசிய அறையை தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டு, நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. ‘இ‘ மற்றும் ‘எப்‘ ரகசிய அறைகள் கோவில் பூஜை தேவைகளுக்காக அடிக்கடி திறக்கப்படுவது வழக்கம். ‘சி‘ மற்றும் ‘டி‘ அறைகளில் கோவில் திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. ‘ஏ‘ ரகசிய அறையும் ஏற்கனவே திறக்கப்பட்டு நகைகள் மதிப்பிடப்பட்டது.
‘பி‘ ரகசிய அறையானது, சயன கோலத்தில் அருள்பாலிக்கும் பத்மநாபசாமியின் தலைப்பகுதி அருகே உள்ளது. அந்த அறையில்தான் பொற்குவியல்கள் குவிந்து கிடப்பதாக கருதப்படுகிறது. சாமியின் தலைப்பகுதிக்கு அருகில் உள்ள இந்த அறையினை திறக்கத்தான் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.