நெல்லை அருகே பயங்கரம்: மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு வாலிபரை வெட்டிச்சாய்த்த கும்பல்
மோட்டார் சைக்கிளை மோதவிட்டு வாலிபரை வெட்டிச் சாய்த்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கயத்தாறு,
மோட்டார் சைக்கிளை மோதவிட்டு வாலிபரை வெட்டிச் சாய்த்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை அருகே நடந்த இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கோவில் கொடை விழாதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகுகிருஷ்ணன் (வயது 30), ஆனந்த் (28), சுப்பையா (38). 3 பேரும் உறவினர்கள். கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது உறவினர் சரவணன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் வசித்து வருகிறார்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரை விலக்கு பகுதியில் உள்ள உய்க்காட்டான் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா கடந்த 3 நாட்களாக நடந்தது. அழகு கிருஷ்ணன், ஆனந்த், சுப்பையா ஆகிய 3 பேரையும் கோவில் கொடை விழாவுக்கு தனது வீட்டுக்கு வருமாறு சரவணன் அழைத்தார். அதன்படி நேற்று முன்தினம் காலையில் அழகு கிருஷ்ணன், ஆனந்த், சுப்பையா ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டானில் உள்ள சரவணனின் வீட்டுக்கு வந்தனர்.
கார் மோதியதுநள்ளிரவில் கோவிலில் சாமக்கொடை பூஜை முடிந்ததும், அழகு கிருஷ்ணன், ஆனந்த், சுப்பையா ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். அதிகாலை 3.30 மணி அளவில் கங்கைகொண்டான் ஊருக்கு வெளியே நாற்கரசாலையில் இணையும் சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்றது.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அழகு கிருஷ்ணன், ஆனந்த், சுப்பையா ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
கொலைவெறி தாக்குதல்உடனே அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து கீழே இறங்கியது. அவர்களை கண்டதும் அழகு கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பல் 3 பேரையும் சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது. 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
அப்படி இருந்தும் அவர்கள் கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடினார்கள். அந்த கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டி வெட்டியது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பியபடி இருளில் 3 பேரும் ஓடினார்கள்.
ரத்த வெள்ளத்தில் பிணம்அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய அழகுகிருஷ்ணன் சிறிது தூரத்தில் சாலையில் விழுந்தார். சாலையில் விழுந்தவரை அந்த கும்பல் மீண்டும் அரிவாளால் வெட்டியது. அழகுகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அதன்பிறகும் கொலை வெறி அடங்காத அந்த கும்பல் ஆனந்த், சுப்பையாவை விரட்டிச் சென்று வெட்டியது. இருவரும் காட்டுப்பகுதிக்குள் சென்று தப்பினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆனந்த், உடலில் இருந்து ரத்தம் அதிக அளவு வெளியேறிய நிலையில் அங்குள்ள சாலையில் மயங்கி கிடந்தார். சுப்பையாவும் காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் மறைவான பகுதியில் பதுங்கி இருந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிஅதிகாலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்– இன்ஸ்பெக்டர்கள் மரிய பிரான்சிஸ் சேவியர், ஞானராஜ், ராயல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அந்த பகுதியில் படுகாயங்களுடன் கிடந்த ஆனந்த், சுப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அழகு கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைகொலை நடந்த இடத்தை தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை நடந்த பகுதியில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்து இருந்தது.
இந்த கொலை தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்தது. கொலை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கோவில் கொடை விழா நடந்த ஊருக்கு அருகில் இந்த பயங்கர கொலை நடந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.