ஜலகண்டாபுரம் அருகே பட்டாசுகள் வெடித்து கட்டிடம் இடிந்து தரைமட்டம்


ஜலகண்டாபுரம் அருகே பட்டாசுகள் வெடித்து கட்டிடம் இடிந்து தரைமட்டம்
x
தினத்தந்தி 9 July 2017 4:45 AM IST (Updated: 9 July 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரம் அருகே பட்டாசுகள் வெடித்து கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது.

ஜலகண்டாபுரம்,


ஜலகண்டாபுரம் அருகே செலவடையைச் சேர்ந்தவர் அசோகன்(வயது50). இவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க செலவடையில் ஹாலோபிளாக் கற்களால் கட்டிடம் கட்டி மேலே ஆஸ்பெஸ்டாஸ்(சிமெண்டு அட்டை) போட்டு வந்தார்.

இந்த கட்டிடத்தில் அசோகனின் மனைவி சாந்தி மற்றும் தொழிலாளர்கள் குமார், சிவா, பாப்பா, செல்வி ஆகியோர் பட்டாசு தயாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில், தயாரித்த பட்டாசுகளை கட்டிடத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.


நேற்று காலை சுமார் 9 மணி அளவில் பாப்பா என்ற தொழிலாளி பட்டாசு தயாரிக்கும் கட்டிடத்தை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டாசு அடுக்கி வைத்திருந்த பகுதியிலிருந்து புகை வந்தது. இதனால் அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஒடி வந்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் தீயை அணைக்க விரைந்து வந்தனர். அப்போது கட்டிடத்திற்குள் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த கட்டிடம் அடியோடு இடிந்து தரைமட்டமானது. இதனால் தீயை அணைக்க வந்த பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், செலவடை கிராமநிர்வாக அதிகாரி சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பட்டாசு தயாரிக்கும் கட்டிடத்திற்குள் தொழிலாளர்கள் வருவதற்குள் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story