கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு கட்சியினருடன் கதிராமங்கலத்திற்கு செல்ல முடிவு வைகோ பேட்டி


கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு கட்சியினருடன் கதிராமங்கலத்திற்கு செல்ல முடிவு வைகோ பேட்டி
x
தினத்தந்தி 9 July 2017 4:30 AM IST (Updated: 9 July 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு கட்சியினருடன் நாளை கதிராமங்கலத்திற்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக தஞ்சையில் வைகோ கூறினார்.

தஞ்சாவூர்,


பேரறிஞர் அண்ணாவின் 109–வது பிறந்தநாள் விழா மாநில மாநாட்டை செப்டம்பர் 15–ந் தேதி தஞ்சையில் ம.தி.மு.க. நடத்த இருக்கிறது. ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிறது. அண்ணா பிறந்தநாள் விழாவை தவறாமல் பெரும் சிறப்பாக நடத்தி வருகிறோம். தஞ்சை பஞ்சபிரதேசமாகிவிடுமோ என்ற சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்றனர். கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு ஊக்கப்படுத்தி மத்தியஅரசு துரோகம் செய்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தை காக்க ம.தி.மு.க. போராடி வருகிறது. மக்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் இந்த காலகட்டத்தில் தஞ்சையில் மாநாட்டை நடத்துவது பொருத்தமாக இருக்கும்.

கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு. அவர்கள் அனைவரையும் 9–ந் தேதிக்குள்(அதாவது இன்று) விடுதலை செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகள், தமிழ்அமைப்புகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில், அச்சுறுத்தும் நடவடிக்கையாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அமைதியாக போராடிய அவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம்சாட்டியிருப்பது பலத்த கண்டனத்திற்குரியது.

மக்கள் கிளர்ச்சியை அடக்குமுறையால் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது. மக்கள் கிளர்ச்சியை அணைக்க முடியாது. நசுக்கவும் முடியாது என்பதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணி பார்க்க வேண்டும். அது மேலும் கிளர்ந்து எழும். அரசியல் நோக்கத்திற்காக யாரும் போராடவில்லை. எதிர்காலம் அழிந்துவிடுமோ, எதிர்கால தலைமுறை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் எதிர்கால சந்ததியினருக்காக போராடுகிறோம். இந்த கருத்தை ஆழமாக யோசிக்க வேண்டும். நாளை மறுதினம்(நாளை) கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு கட்சியினருடன் புறப்பட்டு கதிராமங்கலம் நோக்கி செல்ல முடிவு செய்து இருக்கிறோம்.

புதுடெல்லி, புதுச்சேரிக்கு மாநிலஅரசுக்குரிய அந்தஸ்து தர வேண்டும். புதுடெல்லியில் அரவிந்த்கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய பா.ஜனதா அரசு எப்படி நெருக்கடி கொடுக்கிறதோ அதேபோல் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் செயல்படும் அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் கவர்னர் செயல்பட்டு வருகிறார். இந்த போக்கு கண்டனத்திற்குரியது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்–அமைச்சர் அறிவித்து இருப்பது நிம்மதியை தருகிறது. ஏற்கனவே பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்கிறோம். மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அமைச்சரவை கூட்டி முடிவு செய்யப்பட்ட வி‌ஷயம் அது. இப்போது பரோலில் விடுவதற்கு பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை. பேரறிவாளனை மட்டுமின்றி 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story