ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சென்று மிரட்டல்: பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் 9 பேர் கைது


ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சென்று மிரட்டல்: பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் 9 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சென்று மிரட்டல்: பெட்ரோல் வெடிகுண்டு, பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் 9 பேர் கைது தேனி அருகே பரபரப்பு

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தங்கபாண்டியன் (47) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அடையாளம் தெரியாத சிலர் அந்த நிறுவனத்துக்குள் புகுந்து தங்கபாண்டியனை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராஜூவின் நிறுவனத்துக்குள் மர்ம நபர்கள் 9 பேர் புகுந்துள்ளதாகவும் அவர்களிடம் பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் கத்தி, அரிவாள், கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பதாகவும் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் அந்த நிறுவனத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை 9 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டிக்கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜூவுக்கும் தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் முத்துலட்சுமியம்மாள் (65) என்பவருக்கும் சொத்துப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பெரியகுளத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவருக்கு தனக்கு சொந்தமான சில சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையை முத்துலட்சுமியம்மாள் கொடுத்துள்ளார். ஆனால் அந்த சொத்துக்களை சோலையப்பன் அனுபவிக்க முடியாதபடி ராஜூ பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சோலையப்பன், பெரியகுளத்தை சேர்ந்த கூலிப்படையினர் கண்ணன் (40), மரைக்காயர் (50), ரகுமான் (38), பிரதீப் (20), பரக்கத்துல்லா (40), சிவா (38), ராஜேஷ் (29), மனோஜ்குமார் (30), உம்மர்அலி (38) ஆகியோரை ராஜூவின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் உள்ளவர்களை மிரட்டுவதற்காக அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சோலையப்பனை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த பிரச்சினையில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story