பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,748 வழக்குகளுக்கு தீர்வு


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,748 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,748 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்,

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற, தேசிய மற்றும் மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் பொருட்டு மக்கள் நீதிமன்றம் நேற்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதி ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா ஆகியோர் கொண்ட அமர்வானது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை நடத்தியது.


இதில் குடும்பநல வழக்கு, சிவில் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வழக்கு உள்ளிட்ட 3,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,413 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 30 லட்சத்து 18 ஆயிரத்து 483-க்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. ஒரு காசோலை மோசடி வழக்கில் மட்டும் ரூ.5 கோடிக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைசாமி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அரியலூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரகுமான் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. 5,209 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 335 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 279-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,748 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Related Tags :
Next Story