எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட விழாக்குழு தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார்.


இக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், “தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டம் உள்ளிட்ட மக்கள்நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களின் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். இந்த நாயகரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டாட அரசு அலுவலர்கள், தொண்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் எம்.ஜி.ஆரின் புகழை அறிந்து கொள்ளும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி, போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்க வேண்டும்” என்று கூறினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தா பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வீடியோ படக்காட்சிகள் கிராமம் கிராமமாக ஒளிபரப்பப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த விழாவை குடும்ப விழாவாக எண்ணி ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திசாமித்தல், சந்திரகாசி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன்,ராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள லட்சினைகளை (லோகோ ஸ்டிக்கர்) அரசுத்துறை வாகனங்களில் வைத்திலிங்கம் எம்.பி. ஒட்டினார். பின்னர் நூற்றாண்டு விழாவினை நடத்த பாலக்கரை அருகில் உள்ள சுந்தர் நகரில் தகுந்த இடத்தினை ஆய்வு செய்தனர். 

Related Tags :
Next Story