தாராபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல்


தாராபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2017 3:30 AM IST (Updated: 9 July 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்,

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் தாராபுரம் திருப்பூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் குறித்து காமன்கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:–

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4–வது வார்டுகளில் காமன்கோவில் தெருவின் ஒருபகுதி அடங்கி உள்ளது. இதில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2 மாதமாக இந்த பகுதிக்கு நகராட்சியின் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படவில்லை. நகராட்சி மூலம் இந்த பகுதிக்கு ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்பட்டது. வறட்சியின் காரணமாக தற்போது இந்த ஆழ்குழாய் கிணறு வறண்டுவிட்டது. இதனால் குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீருக்காக அருகே உள்ள பகுதிகளுக்குச் சென்றால் அங்கிருப்பவர்கள் குடிநீர் பிடிக்க விடுவதில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். இந்த பகுதியில் உள்ள அனைவரும் தொழிலாளர்களாக உள்ளதால் விலை கொடுத்து குடிநீர் வாங்கி உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்தி தரவேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை நாள்தோறும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் மனுகொடுத்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தகவல் அறிந்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தாராபுரம் திருப்பூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் குடிநீர் வழங்கக்கோரி புறவழிச்சாலையில் பூளவாடி பிரிவில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வள்ளுவர் தெருவைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:–

3–வது மற்றும் 4–வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர்தெரு, நாடார்தெரு, வடக்குத்தெரு ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நகராட்சியில் குடிநீர் வழங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும் வற்றிவிட்டன. நாடார் தெருப்பகுதியில் உள்ள குடிநீர் மேல் நிலைத்தொட்டியின் கீழே தற்காலிகமாக குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். அந்த குழாயில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடிநீர் பிடித்துக் கொண்டு மற்ற பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கு விடுவதில்லை. இதனால் ஒரு குடம் குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறோம். குடிநீர் கேட்டு தினமும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தகவல் அறிந்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பமறுத்தனர். இதனால் சாலைமறியல் போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு கூடியது. பஸ்சில் வந்த பயணிகளில் சிலர் குழந்தைகளுடன் இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.

புறவழிச்சாலையில் சாலை மறியல் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அந்த வழியாக காரில் வந்தார். அப்போது சாலை மறியல் காரணமாக அவரது கார் சாலை மறியல் நடந்த இடத்திற்கு சற்று தள்ளி நிறுத்த வேண்டியதாயிற்று. திருமாவளவன் விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் நடப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். உடனே திருமாவளவன் காரைவிட்டு இறங்கி நடந்துவந்து, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் குறைகளை கேட்டார். பிறகு அங்கிருந்த அதிகாரிகளிடம் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு திருமாவளவன் போராட்டக்காரர்களிடம் தான் அவசரமாக கோவை சென்று கொண்டிருப்பதாகவும், தனது காருக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவரது காருக்கு மட்டும் வழிவிட்டதால் திருமாவளவன் காரில் ஏறிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story