அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் டெங்கு காய்ச்சலுக்கு 3–ம் வகுப்பு மாணவி பலி
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் டெங்கு காய்ச்சலுக்கு 3–ம் வகுப்பு மாணவி பலியானார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. அவருடைய மனைவி தீபா (26). இவர்களுடைய மகள்கள் மைனுகா (8), லிங்கா (5). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் மைனுகா 3–ம் வகுப்பு படித்து வந்தார். லிங்கா 1–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி மாலை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த மைனுகா தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். உடனே கதிர்வேல் மகளை கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மைனுகாவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. அதனால் கதிவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைனுகாவை சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது மைனுகாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மைனுகா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மைனுகா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ–மாணவிகள் 10–க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மைனுகாவையும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிவிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.