மதுவிற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்


மதுவிற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 9 July 2017 4:45 AM IST (Updated: 9 July 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே சந்துக்கடை மதுவிற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவரின் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைவாசல் ,

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 137 மதுக்கடைகள் மூடப்பட்டன. புதிய கடைகள் அமைக்க பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கடைகளை திறக்க முடியவில்லை. தற்போது 91 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.

இதனால் சில இடங்களில் நீண்ட தூரம் சென்று மதுபிரியர்கள் மதுவாங்கி குடித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தற்காலிகமாக மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கியும், சந்துக் கடைகள் மூலமாகவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அவர்களை சந்துக்கடைக்காரர்கள் கவனித்து வருவதாகவும் புகார் எழுந்தது.

இந்தநிலையில் நேற்று ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு வீரகனூர் பகுதியில் உள்ள சில வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் 25 பெட்டிகளில் 1,200 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

இதையடுத்து அங்கிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வீரகனூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் அகிலன் மனைவி மாது (வயது 45) என்பதும், அவருடைய தம்பி சுப்பிரமணி (43) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுப்பிரமணி வாழப்பாடி பகுதியில் வசித்து வந்ததும், தற்போது மதுவிற்பனை செய்வதற்காக வீரகனூரில் உள்ள அக்காள் மாது வீட்டுக்கு வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் மொத்தமாக வீரனூர் வேப்பம்பூண்டியில் உள்ள அரசு மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கி விற்பதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாது, சுப்பிரமணி ஆகியோர் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேருக்கும் மொத்தமாக 1,200 மதுபாட்டில்களை விற்பனை செய்த வேப்பம்பூண்டி மதுக்கடையில் பணிபுரியும் 2 மேற்பார்வையாளர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்ககோரி மதுவிலக்கு போலீசார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

இதற்கிடையே மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடம் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, வீட்டில் மற்றும் சந்துகடைகளில் பதுக்கி மது விற்க உடந்தையாக வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் இருந்ததாகவும் புகார் எழுந்தது.

அதன்பேரில் இருவரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். இதேபோன்று மாநகர, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிற்பனை நடைபெறுவதாகவும், போலீசார் சோதனை மேற்கொண்டு சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story