குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி செம்பட்டு பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தை அடுத்த செம்பட்டு சோதனைச்சாவடி அருகே புதுத்தெரு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. அங்குள்ள அடிபம்பில் தண்ணீரை பிடித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அடிபம்பில் அதிகமானோர் நின்று தண்ணீர் பிடிப்பதால் மற்ற வேலைகளை பார்க்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் சீரான குடிநீர் கேட்டு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு சோதனைச் சாவடி அருகே காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரராஜ், இன்ஸ்பெக்டர் பெரியய்யா மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனர் தயாநிதி, இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், மஞ்சள் நிறத்தில் வந்த கலங்கலான குடிநீரை பாட்டிலில் பிடித்து, அதனை அதிகாரிகளிடம் காட்டினார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நேற்று காலை சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
1 More update

Related Tags :
Next Story