சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும்


சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும்
x
தினத்தந்தி 10 July 2017 4:30 AM IST (Updated: 9 July 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தபோது கூறினார்.

ஈரோடு,

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மோடி அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு நடுத்தர மற்றும் ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக நெசவு மற்றும் ஜவுளித்துறையை சேர்ந்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். முந்தைய மன்மோகன்சிங் ஆட்சியின் போது ‘சென்வாட்’ வரியை அரசு ரத்து செய்து நெசவு தொழிலை காப்பாற்றியது.

ஆனால் தற்போது ஜவுளி ரகங்களுக்கு 10 சதவீதத்துக்கும் மேல் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதால் கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நெசவுத்தொழிலாளர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே தமிழக முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த முயன்றது. ஆனால் அதற்கு மோடி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து என் பிணத்தின் மீது தான் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த வேண்டும் என்றார். ஆனால் தற்போது அவரே சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தி உள்ளார்.

கதிராமங்கலத்தில் குழந்தை குட்டிகளோடு பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ‘பே‌ஷன்’ என்று கூறி கொச்சைப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது சட்ட புத்தகத்தில் மட்டுமே உள்ளது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மிகவும் சீர்கெட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் தான் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் முதல் –அமைச்சர் ஆனார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இன்றுவரை வலுவாகத்தான் உள்ளது. அதி.மு.க. அரசு, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக பேச அச்சப்படுகிறது. அவர்கள் ஒருவர்மாறி ஒருவர் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் காலில் விழுகிறார்கள்.

இலங்கை அரசு தமிழக மீனவர்கள் தாக்குதலில் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறது. இதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு கண்டிப்பதுடன், தாக்குதலை நிறுத்த பேச்சு வார்த்தை நடத்தவேண்டும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


Next Story