மண்டபத்தில் 380 கிலோ கடல் அட்டைகளுடன் 3 வாலிபர்கள் கைது
மண்டபத்தில் 380 கிலோ கடல் அட்டைகளுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்,
மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று கடலோர போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, ராஜ்குமார் உள்பட கடலோர போலீசார் பைபர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கு கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த சிறிய நாட்டுப்படகை நிறுத்தி கடலோர போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த படகில் 30 மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது27) என்பவரையும் பிடித்து படகு மற்றும் கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, கடல் அட்டைகளுடன் மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜ்மீர்கானை கைது செய்தனர்.
இதேபோல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியின் மற்றொரு இடத்தில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறை குழுவினர் கடற்கரையில் 3 கேன்களுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அந்த கேன்களில் 100 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அஸ்கர் அலி (25) என்பவரை வனத்துறையினர் பிடித்து கைதுசெய்தனர். உயிரோடு இருந்த 100 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பாம்பன் ரோடு பாலத்தி நின்ற படி கடலில் விட்டனர்.
மேலும் அதே கடற் கரையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து சோதனை செய்த போது கேனில் இருந்த 30 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக நாகூர்மீரான் (22) என்பவரை பிடித்து வழக்குப்பதிந்து வனத்துறையினர் கைது செய்தனர். கடல் அட்டை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 3 இடங்களில் கடலோர போலீசார் மற்றும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 380 கிலோ கடல் அட்டைகளும் பதப்படுத்தப்பட்ட கடத்தல்காரர்கள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.