அ.தி.மு.க. நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


அ.தி.மு.க. நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் கரையாம்புதூரில் வருகிற 22–ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. (அம்மா) செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூரில் நடந்தது.

கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொங்கு மண்டலம் தான் பெரும் மாற்றத்தை கொடுத்தது. அவர் மறைவுக்கு பின் அ.தி.மு.க. அழிந்து விடும், நிலைக்காது என்று பேசி வருகிறார்கள். தொண்டர்களால் உருவாக்கப்பட்டு எம்.ஜி.ஆரால் வழிநடத்தப்பட்ட இந்த இயக்கம் நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும்’ என்றார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். போட்ட விதையால் இந்த இயக்கம் ஆலமரமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இயக்கம் மறைந்து விடும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தமிழக அரசுக்கு பக்கபலமாக உள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை பிடிக்க நினைத்த எதிர்க்கட்சியினர் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்’ என்றார்.

மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி பேசும்போது, உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. இந்த இயக்கத்தையும், அரசையும் காப்பாற்றி வழிநடத்தவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.

உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, அவினாசி–அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது, ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருவது பலிக்காது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.


Next Story