‘‘மோடி அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழி நடத்துகிறது’’ திருமாவளவன் குற்றச்சாட்டு
மோடி அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழி நடத்துகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அரசியல் தொடர்பான கருத்துகளையும் அவர் முன்வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:–
மத்தியில் ஆளும் மோடி அரசு ஒட்டுமொத்த சிறுபான்மை இன மக்களிடமும் இந்து மதத்தை திணிக்கும் அரசாகவும், ஒட்டுமொத்த இந்திய மக்களை அச்சுறுத்தும் அரசாகவும் இருக்கிறது. மேலும், மோடி அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் வழிநடத்துகிறது. அப்பாவி பொதுமக்கள் மீது பல சட்டத் திணிப்புகளை செய்து வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் தலித் சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பது தலித் சமூகத்துக்கு இடையே ஏற்படும் போட்டி அல்ல. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் அம்பேத்கர் சிந்தனையாளராக உள்ளார். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு உறுதுணையாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்க சிந்தனையாளராகவும் இருக்கிறார்.
இதனால், ஜனாதிபதி வேட்பாளர்கள் 2 பேரும் தலித்தாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளருக்கும், அம்பேத்கர் சிந்தனையாளருக்கும் இடையே நடக்கும் போட்டியாகத் தான் இதை கருத முடியுமே தவிர 2 தலித்களுக்கு இடையேயான போட்டி அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.