கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி தோட்டாக்கள்


கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி தோட்டாக்கள்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி அருகே உள்ள கொடியன் சோலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய தோட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 8–ந் தேதி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டன்சத்திரத்தை அடுத்த தாசரிபட்டி புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன், தங்கராஜ், மலைச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணன், அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் கொடியன் சோலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் தோட்டத்துக்கு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பயன்படுத்தப்படாத 7 துப்பாக்கி தோட்டாக்களும், பயன்படுத்தப்பட்ட 47 தோட்டாக்களும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தோட்டாக்களை பயன்படுத்தி அப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டாதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தோட்டாக்கள் தோட்டத்திற்கு கொண்டு வந்தது யார்?, அங்கு யாரும் சந்தேகப்படும்படி வந்து சென்றனரா? என்பது குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலை அடுத்த மலைக்கிராமங்களில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தனியார் தோட்டத்தில் ஏற்கனவே துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு தனியார் தோட்டத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story