திருமழிசையில் மது குடிக்கும் தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை
திருமழிசையில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, முத்துராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன். இவரது மகன் உசேன் (வயது 26). பெயிண்டர். இவர் கடந்த 3–ந்தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான முனுசாமி (32), அப்துல் ரகுமான் (29), பாட்ஷா (26) ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது உசேனிடம் கூடுதலாக மது வாங்கி தரும்படி முனுசாமி கேட்டார்.
உசேன் கூடுதல் மது வாங்கி தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் உசேனுக்கும் உடன் வந்த நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் உசேனை கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த உசேன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உசேன் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முனுசாமி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.