பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் பேச்சு


பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 15 பெண்களுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 539 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்கல்வித்துறையின் மூலம் பல்வேறு கல்லூரிகள் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தர்மபுரியில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கவும் ஆணையிடப்பட்டு உள்ளது. கல்லூரிகளில் மொத்தம் 961 பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது நடப்பாண்டில் 268 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், கூடுதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story