இன்னும் ஒரு வாரத்தில் அமைதி கூட்டம்; மதக்கலவரத்தை தூண்டிவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது


இன்னும் ஒரு வாரத்தில் அமைதி கூட்டம்; மதக்கலவரத்தை தூண்டிவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது
x
தினத்தந்தி 10 July 2017 3:15 AM IST (Updated: 10 July 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் ஒரு வாரத்தில் அமைதி கூட்டம் நடத்தப்படும் என்றும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்து அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் அமைதியை பாதுகாக்க வேண்டும். அதை விடுத்து மதக் கலவரங்களை தூண்டிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் அமைப்புகளை ஒடுக்குவோம். பா.ஜனதாவை சேர்ந்த சில தலைவர்கள் மங்களூருவில் மதக்கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள்.

அவர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் அமைதியாக இருந்தால் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். தேவை இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி மதக்கலவரத்தை தூண்டிவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. மங்களூரு உள்பட மாநிலத்தின் எந்த மூலையிலும் மதக்கலவரத்தை தூண்டிவிட்டால் அதை அரசு சகித்துக்கொள்ளாது.

பஜ்ரங்தள உள்பட இந்து அமைப்புகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இதர அமைப்புகள் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மங்களூருவில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மங்களூருவில் பதற்றமான சூழலை தணிக்க அனைத்துகட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளின் அமைதி கூட்டம் இன்னும் ஒரு வாரத்தில் நடத்தப்படும்.  இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story