கிழமத்தூர் சவுந்தர்யநாயகி சமேத சிவலோகநாதர் திருக்கல்யாண உற்சவம்


கிழமத்தூர் சவுந்தர்யநாயகி சமேத சிவலோகநாதர் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

கிழமத்தூர் சவுந்தர்ய நாயகி சமேத சிவலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழமத்தூர் கிராமத்தில் சவுந்தர்யநாயகி சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக வேண்டியும், மழை வேண்டியும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை மணப்பெண், மணமகனுக்கு பக்தர்கள் 50 சீர்வரிசை தட்டுக்களோடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்த னர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஹோமம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நால்வர் காட்டிய நன்னெறி சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசையும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை திருமணக்காட்சியை காண கோவிலுக்கு பக்தர்கள் வந்தடைந்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு மண வீட்டார் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சவுந்தர்யநாயகி சமேத சிவலோகநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமி, அம்பாளை மணக்கோலத்தில் வழிபட்டனர். தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து இரவு சவுந்தர்யநாயகி சமேத சிவலோகநாதர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் தேங்காய், பழம், பூ வைத்து சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருக்கல்யாண உற்சவத்தில் திட்டக்குடி, திருச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story