மேலப்பாளையத்தில் பட்டப்பகலில் நகைக்கடை அதிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை


மேலப்பாளையத்தில் பட்டப்பகலில் நகைக்கடை அதிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 10 July 2017 4:45 AM IST (Updated: 10 July 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தில் பட்டப்பகலில் நகைக்கடை அதிபரை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

நெல்லை,

மேலப்பாளையம் ஆமீன்புரம் 7–வது தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர்(வயது47). இவர் நெல்லை டவுன் மேலரதவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

அப்துல்காதருக்கு சகிலாபானு என்ற மனைவியும், ரோசினா(17) என்ற மகளும் உள்ளனர். ரோசினா, மேலப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அப்துல்காதருக்கு மேலும் ஒரு மனைவியும், அந்த மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் மேலபாளையம் சார்தார்புரத்தில் வசித்து வருகிறார்கள். அப்துல்காதரின் சொந்த ஊர் நெல்லை டவுன் பாட்டபத்து பகுதியாகும்.


அப்துல்காதர், நகைக்கடையுடன் இடம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். இந்த இடப்பிரச்சினை சம்பந்தமாக இவருக்கும் மேலப்பாளையத்தை சேர்ந்த பைரஸ்காஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைரஸ்காஜா, நெல்லை டவுனில் உள்ள அப்துல்காதரின் நகைக்கடைக்கு சென்று தகராறு செய்து உள்ளார். இது சம்பந்தமாக டவுன் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி மேலப்பாளையம் போலீசார் விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். மேலப்பாளையம் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி பைரஸ்காஜாவிடம், அப்துல்காதரிடம் எந்த பிரச்சினைக்கும் செல்லமாட்டேன் என்று எழுதி வாங்கிவிட்டு அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். இதைத்தொடர்ந்து அப்துல்காதர் வீட்டிற்கு 2 நாட்கள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுவும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டன.


இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அப்துல்காதர், டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மேலப்பாளையம் சந்தை முக்கு சினிமா தியேட்டர் அருகில் வந்தபோது அந்த வழியாக வந்த மர்ம கும்பல் இவரை மோட்டார் சைக்கிளை விட்டு கீழே தள்ளிவிட்டது.

இதில் நிலைதடுமாறிய அப்துல்காதரை அரிவாளால் அவருடைய காலில் வெட்டினார்கள். உடனே எழுந்து தப்பித்து ஓட முயன்ற அவரை சரமாரியாக வெட்டினார்கள். இருந்தாலும் வெட்டுக்காயத்துடன் சிறிது தூரம் ஓடிய அப்துல்காதரை அந்த கும்பல் விரட்டி சென்று கழுத்து, முகம், கைகால் என அனைத்து பகுதியிலும் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அப்துல்காதர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை கும்பல் அந்த இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டனர்.

 இது பற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங் தலைமையில் உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரகுபதிராஜா, பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்துல்காதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினார்கள். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சினிமா படபாணியில் நகைக்கடை அதிபரை ஒரு கும்பல் விரட்டிச்சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

 அப்துல்காதர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு அவருடைய உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. உடனே அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் திரண்டு கடைகளை அடைத்தனர்.


இந்த கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மேலும் இந்த கொலையாளிகளை பிடித்து விசாரணை நடத்த மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலப்பாளையம் சந்தை அருகில் அப்துல்காதருக்கு 8½ சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் சம்பந்தமாக பைரஸ்காஜா என்பவருக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலம் சம்பந்தமாக ஏற்கனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு போலீஸ்நிலையம் வரை பிரச்சினை சென்று உள்ளது. இந்தநிலையில் அப்துல்காதர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது இந்த நிலப்பிரச்சினை காரணமாக தான் என்று முதல் கட்டவிசாரணையில் தெரியவந்து உள்ளது. இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் குத்பூதின் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  


Next Story