வேலூர் மாவட்டத்தில் 1,655 மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்


வேலூர் மாவட்டத்தில் 1,655 மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 July 2017 5:46 AM IST (Updated: 10 July 2017 5:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 1,655 மையங்களில் இளம் வாக்காளர்களுக்கான பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 1,655 மையங்களில் இளம் வாக்காளர்களுக்கான பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 2–வது கட்டமாக வருகிற 23–ந் தேதி முகாம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 1,627 வாக்குச்சாவடி மையங்கள், 13 தாலுகா அலுவலகங்கள், 12 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 3 வருவாய் கோட்ட அலுவலகங்கள் என மொத்தம் 1,655 மையங்களில் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் நடந்தது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடந்தது. 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.

படிவத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள எண் குறிப்பிட வேண்டும். மேலும் இளம் வாக்காளர்களுக்கான ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் இணைத்து கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, புதிய வாக்காளர்களும் தங்களது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஏராளமான இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் ஒருங்கிணைந்து, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், திருத்தங்களை கண்டறிந்து வாக்காளர்களிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொண்டனர்.

காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்பாடி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு ஏற்பாடாக வைக்கப்பட்ட முகாமை கலெக்டர் ராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘விண்ணப்பத்தின் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுப்பார்கள். வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான 2–ம் கட்ட சிறப்பு முகாம் வருகிற 23–ந் தேதி நடைபெறுகிறது. புதிய வாக்காளர்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில் பிளே ஸ்டோரில் சென்று (தமிழக வாக்காளர்களுக்காக) TN election என்ற செயலியையும், (வெளிமாநில வாக்காளர்களுக்காக) ECI APP என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் 102 கல்லூரிகளிலும் இந்த முகாம் நடைபெறுகிறது’ என்றனர்.


Next Story