பூண்டி ஏரியை சுற்றி உள்ள 28 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம்


பூண்டி ஏரியை சுற்றி உள்ள 28 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம்
x
தினத்தந்தி 11 July 2017 4:45 AM IST (Updated: 11 July 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரி வறண்டு குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் ஏரியை சுற்றி உள்ள 28 கிராமங்கள், குசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. மேய்ச்சல் இல்லாமல் ஆடு, மாடுகள் இறந்து விடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

செங்குன்றம்,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சென்னை வாழ் பொதுமக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

பருவ மழை பொய்த்து போனதாலும், கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்று போனதாலும் புழல் தவிர மற்ற 3 ஏரிகள் முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன.

குடிநீர் பஞ்சம்

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை குசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், தாமரைபாக்கம், அணைக்கட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து வங்கக்கடலில் சென்று கலக்கிறது.

பூண்டி ஏரியில் இருந்து வங்கக்கடல் வரை சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் வரை குசஸ்தலை ஆற்றின் இரு புறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றங்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கிராமங்களில் குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாய நிலம் உள்ளது.

மழை பொய்த்து போனதால் குசஸ்தலை ஆறும் வற்றி விட்டது. இதனால் ஆற்றங்கரையில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டன. இதனால் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

பொதுமக்கள் அவதி

குறிப்பாக பூண்டி அருகே உள்ள அரியத்தூர், நம்பாக்கம், ராஜபாளையம், ஆற்றம்பாக்கம், மோவூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, புன்னப்பாக்கம், செம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வராததால் பொது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டு பொதுமக்கள் பூண்டி, எல்லாபுரம், புழல், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வரும் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு...

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் காணாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. அதே போல் பூண்டி ஏரி சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் 24.50 அடியாக பதிவாகியது. 776 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. லிங்க் கால்வாய் மூலமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர், பேபி கால்வாய் மூலமாக சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் தற்போது பூண்டி ஏரி வறண்டு கிடப்பதால் லிங்க் மற்றும் பேபி கால்வாய்களில் தண்ணீர் திறப்பு சாத்தியபடவில்லை.

ஆடு, மாடுகள் இறக்கும் அபாயம்

பூண்டி ஏரியை சுற்றி 28 கிராமங்கள் உள்ளன. பூண்டி ஏரி வறண்டதால் இந்த கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
கடும் கோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து போனதால் ஏரி வறண்டு விட்டதால் ஆடு, மாடுகள் கூட தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றன. புற்கள் கருகி விட்டதால் மேய்ச்சல் இல்லாமல் ஆடு, மாடுகள் இறந்து விடும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தாங்கள் ஆசையாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளை விற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனால் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மற்றும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் குறைந்தது 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story