வேலை இழந்துள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும், கலெக்டரிடம் மனு
வேலை இழந்துள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 6,500 மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 30 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தின்படி எவ்வித உரிமையும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாலும், உச்சநீதிமன்ற உத்தரவினாலும் 4,321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பணி இழந்த டாஸ்மாக் பணியாளர்களின் கல்வி தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் மாற்று பணி வழங்க வேண்டும். இதற்கான உரிய அரசாணை வெளியிடப்பட வேண்டும். மாற்றுப்பணிக்கான திட்டத்தினை அமல்படுத்தும் போது குறிப்பிட்ட ஒரு துறை என்று மட்டும் இல்லாமல் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களிலும் நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும்.
பணி இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட பணியாளர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் கருணை அடிப்படையில் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணி ஓய்வுபெற உள்ள உதவி விற்பனையாளர்களுக்கு பணிக்கொடை தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.