ஆழ்குழாய் கிணறுகள் மூலம் மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்


ஆழ்குழாய் கிணறுகள் மூலம் மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 July 2017 5:00 AM IST (Updated: 11 July 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை,

மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவில் அருகில் தெப்பக் குளம் உள்ளது. இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு நடக்கும் தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
குளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏராளமான வாத்துகள் ஒருசேர நீந்தி செல்லும். அது பார்ப்போர் கண்களுக்கு ரம்மியமான காட்சியாக அமையும். இந்த குளத்தில் இறந்த முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம்.

வறண்ட குளம்

ஆனால் தற்போது கடும் வறட்சி மற்றும் வெப்பத்தின் காரணமாக நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது தண்ணீரில் மூழ்கி இருந்த நந்தி வெளியே தெரிய தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தேங்கி கிடந்த சிறிதளவு நீரும் ஆவியாகி போனதால் தெப்பக்குளம் வறண்டு போனது.

இதனால் வாத்துகளும், தாகம் தணிக்க வரும் பறவைகளும் நீர் இல்லாமல் பரிதவித்தன. எனவே தெப்பக்குளத்தின் ஒரு ஓரத்தில் ஒரு குழாய் மூலம் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அந்த நீரை வாத்துகள் மற்றும் பறவைகள் குடித்து தாகத்தை தணித்து வந்தன.

குளம் வறண்டு போனதால் திதி கொடுக்க வருபவர்கள், வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தண்ணீர் நிரப்பும் பணி

இதனையடுத்து தெப்பக்குளத்தில் பழுதாகி இருந்த 5 ஆழ்குழாய் கிணறுகள் சீரமைக் கப்பட்டு, தற்போது மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து தெப்பக்குளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது.

எனவே ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தெப்பக்குளத்தில் நிரப்பும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் போதிய தண்ணீர் நிரம்பும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் நாட்களில் போதிய மழை வந்தால் தெப்பக்குளத்தில் ஏற்கனவே இருந்தது போன்று தண்ணீர் நிரம்பும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story