கலெக்டர் அலுவலகத்துக்கு உடலில் சாட்டையால் அடித்தபடி மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
உடலில் சாட்டையால் அடித்தபடி நூதன முறையில் மனு கொடுக்க வந்தவர்களால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக ஏராளமான பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென்று ஒரு பகுதியில் இருந்து உறுமி மேள சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.
அப்போது ஒரு கூட்டத்தினர், உறுமி மேளம் முழங்க தங்களது உடலில் சாட்டையால் அடித்தபடி காலில் கட்டிய சலங்கை ஒலிக்க நடனமாடினர். இதனால் மனு கொடுக்க வந்த மக்கள், அதனை விட்டு, விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினார். இதனால் பரபரப்பு நிலவியது. உடனே போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் குடியிருக்க வீடு கேட்டு மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
நாங்கள் தடாகம் சாலையோரம் வசித்து வருகிறோம். நாங்கள் தெருத்தெருவாக சென்று சாட்டையால் உடலில் அடித்து, நடனமாடி பொது மக்கள் தரும் காசில் பிழைப்பு நடத்தி வருகிறோம்.தினமும் பிழைக்க வழியின்றி வருமானம் இல்லாமல் திண்டாடி வருகிறோம். எங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லாததால் எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. இதன்காரணமாக அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் அல்லது இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.