டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் 4 கிராம பெண்கள் போராட்டம்


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் 4 கிராம பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2017 4:00 AM IST (Updated: 11 July 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் 4 கிராம பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே சூரப்பட்டில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கண்டாச்சிபுரம் இந்திரா நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டாஸ்மாக் கடை திறந்தனர்.

இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை உடனடியாக மூடக்கோரியும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் கடையை மூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் 40–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டாச்சிபுரம் இந்திரா நகரில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், கண்டாச்சிபுரம் இந்திரா நகரில் ஐ.டி.ஐ., நர்சரி பள்ளி மற்றும் குடியிருப்புகள் மத்தியில் டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர். இதனால் இங்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தகராறு செய்கின்றனர். இதனால் பள்ளி– கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த டாஸ்மாக் கடை வழியாக செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த கடையை மூட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற அந்த பெண்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் திண்டிவனம்– மரக்காணம் சாலையில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு சாத்தமங்கலம், காடுவெட்டி, முருக்கேரி ஆகிய 3 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாத்தமங்கலம், காடுவெட்டி, முருக்கேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேப்பேரி அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை அமைந்தால் அங்கு சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க இருக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பிரச்சினை குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். இதனை ஏற்ற அந்த பெண்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story