கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசாருடன் மலைவாழ் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசாருடன் மலைவாழ் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராவ் வரவேற்றார்.
முகாமில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேசியதாவது:–
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் மலைவாழ் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக மலைவாழ் மக்களுக்கு போலீசார் எந்தவொரு உதவியும் செய்ய தயாராக உள்ளனர்.
கல்வராயன்மலையில் மொத்தம் 144 மலை கிராமங்கள் உள்ளன. அங்கு முற்றிலும் சாராயம் இல்லாத கிராமம் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமத்துக்கு பரிசு வழங்கப்படும். மேலும் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடாமல் இருக்க, அவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வனசரகர் நாராயணன், வெங்கடேசன் மற்றும் போலீசார், வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.