திருப்பத்தூரில் பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை தம்பி படுகாயம்
திருப்பத்தூரில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தம்பி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன்கள் முனிராஜ் (வயது 34), கார்த்திக் (30). அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 16 வயது மகளை, அந்த பகுதியை சேர்ந்த சிவா (32) என்பவர் காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவளை ஒகேனக்கல் அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இருதரப்பு பெற்றோரும் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளி மற்றும் அவரது உறவினர்களும், சிவா மற்றும் அவரது உறவினர்களும் ஜெய்பீம் நகர் மைதானத்தில் வைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவாவுக்கு ஆதரவாக முனிராஜ், அவரது தம்பி கார்த்திக் ஆகிய 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முனிராஜ், கார்த்திக் ஆகிய 2 பேரும் சேர்ந்து தொழிலாளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரை தாக்கியுள்ளனர். பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
வெட்டிக்கொலைஇந்த நிலையில் இரவு 9 மணி அளவில் தொழிலாளியின் உறவினர்கள், முனிராஜை செல்போனில் தொடர்பு கொண்டு வெளியே வரும்படி கூறியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து முனிராஜ், கார்த்திக் ஆகிய இருவரும் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அவர்கள் அழைத்த இடத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் திடீரென முனிராஜ், கார்த்திக் ஆகிய 2 பேரையும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சராமாரியாக வெட்டினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே முனிராஜ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சுஇதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முனிராஜுக்கு ஸ்டெல்லாமேரி என்ற மனைவியும், அரவின் (7) என்ற மகனும் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.