பொதுமக்களின் போராட்டத்தால் திறக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் மூடப்பட்ட டாஸ்மாக் கடை


பொதுமக்களின் போராட்டத்தால் திறக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் மூடப்பட்ட டாஸ்மாக் கடை
x
தினத்தந்தி 11 July 2017 3:30 AM IST (Updated: 11 July 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் பொது மக்களின் போராட்டதால் திறக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புவனகிரி,

புவனகிரி குறியாமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று குறியாமங்கலம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைத்து மதுவிற்பனையை அதிகாரிகள் தொடங்கினர்.

இதையறிந்த புவனகிரி தாமரைக்குளத்து தெருவை பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது பொது மக்கள் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷாவை முற்றுகையிட்டதோடு, அவரிடம் குறியாமங்கலம் சாலையில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மது குடித்துவிட்டு வருபவர்கள் அடிக்கடி எங்களிடம் தகராறு செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இங்கு புதிதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க உடனே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து பொது மக்களிடம், இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். ஆனால் அதற்கு போலீசார் இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்றினால் தான் நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா அங்கிருந்த ஊழியர்களிடம் டாஸ்மாக் கடையை மூடுமாறு கூறினார். அதன் படி டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

மேலும் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாகனத்தில் ஏற்றி குடோனுக்கு ஊழியர்கள் எடுத்து சென்றனர். இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொது மக்களின் போராட்டதால் புவனகிரியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story