அரசு பஸ் மீது கார் மோதியதில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி 2 பேர் படுகாயம்


அரசு பஸ் மீது கார் மோதியதில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 July 2017 4:45 AM IST (Updated: 11 July 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் குற்றாலம் சென்று விட்டு திரும்பிய என்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விராலிமலை,

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் சபிபுல்லா (வயது 36). அதே பகுதியை சேர்ந்த சம்சுதீன் மகன் முகமது உசேன் (32), சிவகங்கை மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் அப்துல் சலாம் மகன் முகமது காசிம் (25), முகமது இப்ராகிம் மகன் முகமது முஸ்தபா(30), துல்கருணை மகன் முகமது பைசல் (34). இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

தற்போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், இவர்கள் 5 பேரும் குற்றாலம் செல்ல திட்டமிட்டு காரில் சென்றனர். அங்கு அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டு கொண்டாடினர். பின்னர் மீண்டும் அவர்கள் அதே காரில் திருச்சிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சபிபுல்லா ஓட்டினார். கார் நேற்று அதிகாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விராலி மலைக்குள் நுழைவதற்காக கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக கார் அரசு பஸ்சின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் சபிபுல்லா, முகமது உசேன், முகமது காசிம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் படுகாயமடைந்த முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியான சபிபுல்லா, முகமது உசேன், முகமது காசிம் ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் அரசு டவுன் பஸ் டிரைவரான திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த விக்டர் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் இறந்த முகமது காசிம் சிவில் என்ஜினீயர் ஆவார். விபத்தில் பலியான முகமது உசேன், சபிபுல்லா ஆகியோர் திருச்சியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தனர். முகமது உசேனுக்கு திருமணமாகி ரெஜினா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ரெஜினா தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story