மறைமலைநகரில் காருடன் 2 வாலிபர்கள் கடத்தல் 3 பேர் கைது


மறைமலைநகரில் காருடன் 2 வாலிபர்கள் கடத்தல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2017 4:00 AM IST (Updated: 11 July 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகரில் காருடன் 2 வாலிபர்களை கடத்திச்சென்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நந்து (வயது 22). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் திருத்தேரி பகுதியில் தங்கி உள்ளார்.

கடந்த 8–ந் தேதி இரவு நந்து, தனது நண்பர் ஆதித்யா (21) என்பவருடன் மறைமலைநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக காரில் ஏறினார்கள்.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் நந்து, ஆதித்யா இருவரையும் காருடன் கடத்திச்சென்றனர். காருக்குள் வைத்து இருவரையும் கையால் அடித்து உதைத்த அந்த கும்பல், அவர்களிடம் இருந்து ரூ.1,500 பணத்தை பறித்து விட்டு 2 பேரையும் மறைமலைநகர் அருகே இறக்கிவிட்டு, அதே காரில் தப்பிச்சென்று விட்டனர்.

3 பேர் கைது

இது குறித்து நந்து அளித்த புகாரின்பேரில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே காருடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள்தான் நந்து, ஆதித்யா ஆகிய இருவரையும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் காருடன் கடத்திச் சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (27), யஸ்வந்த் (21), கேரளாவைச் சேர்ந்த கமருதீன் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

கைதான 3 பேரிடம் இருந்து கடத்தப்பட்ட கார், ரூ.1,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பீட்டர் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காருடன் 2 வாலிபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story