கவர்னரின் கிரண்பெடியின் கடிதத்தை திருப்பி அனுப்பினார்
3 நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க மறுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னர் கிரண்பெடியின் கடிதத்தை திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரி,
புதுவையில் ஆளும் முதல்–அமைச்சர் நாராயணசாமியின் காங்கிரஸ் அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. கவர்னர் கிரண்பெடியின் ஆதரவு அதிகாரியான புதுவை நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைத்ததன் மூலம் அவர்களது பனிப்போர் பகிரங்கமாக வெடித்தது.
இருதரப்பினரும் சமூக வலைதளங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாகவும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். கடந்த காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டமன்றத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கவர்னருக்கு பரிந்துரை செய்து மத்திய அரசு ஒப்புதலுடன் மாநில அரசு நியமித்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக பரிந்துரை செய்து மத்திய அரசு அறிவித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி அவசர அவசரமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அரசியல் கட்சியினர் அதிர்ச்சிஇதுமட்டுமில்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் சபாநாயகர் தாமதம் செய்ததால் அவர்களுக்கு நான் பதவிப்பிரமாணம் செய்துவைத்தேன். இதில் சட்ட விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கை புதுவை ஆட்சியாளர்களையும், மற்ற அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசையும், கவர்னர் கிரண்பெடியையும் கண்டித்து புதுவையில் கடந்த 8–ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சார்பில் அவரது செயலாளர் தேவநீதிதாஸ் புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் மத்திய அரசு பரிந்துரைத்த நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவர்களை எம்.எல்.ஏ.க்களாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
திருப்பி அனுப்பினார்அந்த கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வழங்கினார். அதில் சில குறிப்புகளை எழுதிய சபாநாயகர் வைத்திலிங்கம் அதை கவர்னருக்கே திருப்பி அனுப்பினார்.
அந்த கடிதத்தில் சபாநாயகர் எழுதிய குறிப்பில், நியமன எம்.எல்.ஏ.க்களாக 3 பேர் நியமிக்கப்பட்ட உத்தரவில் பெயர்கள் மட்டுமே இருந்தன. அவர்கள் யார்? எந்த முகவரியில் வசித்து வருகிறார்கள்? என்பது பற்றிய விவரங்களை தலைமை செயலாளரிடம் கேட்டு இருந்தேன். அதுகுறித்த விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.
மேலும் 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விவரம் எதுவும் சட்டசபை செயலாளர் அலுவலகத்துக்கு உரிய அதிகாரம் பெற்றவர்களிடம் இருந்து வரவில்லை. ஆனால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளீர்கள். சபாநாயகர் இருக்கும்போது அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும். அவரை மீறி கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. எனவே இதை ஏற்க முடியாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களா?சபாநாயகரின் இந்த முடிவு புதுவை அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளை பொறுத்தவரை சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டுள்ள 3 பேரை சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிப்பது குறித்த அதிகாரம் சபாநாயகரிடம்தான் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களை பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் என அங்கீகரித்து சட்டமன்ற வளாகத்தில் அலுவலகம், இருக்கைகள் ஒதுக்குவதுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகளை வழங்கவேண்டும் என்று சட்டசபை செயலாளரிடம் அவர்கள் கடிதம் கொடுத்து இருந்தனர். அந்த கடிதம் ஏற்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
கவர்னருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க மறுத்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னருக்கு திருப்பி அனுப்பி இருப்பது புதுவை அரசியலில் புதிய விசுவரூபம் எடுத்துள்ளது.